Wednesday, April 15, 2009

ஆதரவு…மனித நேய கட்சியினரை சந்தித்த ராமதாஸ்


சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னையில் மனித நேய மக்கள் கட்சியினரை சந்தித்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டு கொண்டதாகத் தெரிகிறது.

தமுமுக சார்பில் துவக்கப்பட்ட அரசியல் கட்சியான மனித நேய மக்கள் கட்சி துவக்கத்தில் திமுக கூட்டணியில் இடம் பிடித்திருந்தது. அங்கு அவர்களுக்கு திமுக ஒரு தொகுதியை மட்டும் ஒதுக்க முடிவு செய்தது. ஆனால் ஒரு தொகுதி ஒதுக்கும் கலாச்சாரத்தை நிறுத்த வேண்டும் என கூறி மனித நேயக் கட்சி கூட்டணியை விட்டு விலகியது.

இதையடுத்து அதிமுகவுடன் கூட்டணிக்கு முயற்சித்தது. ஆனால், அங்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து சரத்குமார் கட்சியின் ஆதரவுடன் மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

மனித நேய கட்சி சார்பில் மத்திய சென்னையில் தமுமுக செயலாளர் ஹைதர் அலியும், மயிலாடுதுறையில் கட்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாகிருல்லாவும், ராமநாதபுரத்தில் சலிமுல்லாகானும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுளளனர்.

இந் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், ஜிகே மணி ஆகியோர் இன்று சென்னை மண்ணடியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

ஜவாகிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோரை சந்தித்து இருவரும் பேசினர்.

டாக்டர் ராமதாஸ் அவர்களிடம், உங்கள் நட்பு நீடித்த நட்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார்.

இதன்மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என அவர் சூசகமாக கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment